நாகராஜன்கோட்டகத்தில் பாலம் கட்டும் பணி அமைச்சர் காமராஜ் ஆய்வு


நாகராஜன்கோட்டகத்தில் பாலம் கட்டும் பணி அமைச்சர் காமராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 26 Aug 2019 4:15 AM IST (Updated: 26 Aug 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே நாகராஜன்கோட்டகத்தில் பாலம் கட்டும் பணிகளை, அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள நாகராஜன்கோட்டகத்தில் கலிமங்கலம்-ஓகைப் பேரையூர் கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளையாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கட்டுமான பணிகள் சிறப்பாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

கலிமங்கலம்-ஓகைப் பேரையூர் இணைப்பு பாலமானது இந்த பகுதி மக்களின் 40 ஆண்டு கால கனவாகும். அந்த கனவை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

தொலைநோக்கு திட்டம்

இந்த பகுதி மக்கள் ஆற்றின் குறுக்கே மூங்கில் பாலத்தில் நடந்து செல்லும்போது அவர்களது கஷ்டத்தை நான் நன்கு அறிந்தவன். அதனால் தான் அவர்களது கஷ்டத்தை தமிழக அரசு தீர்த்துள்ளது. மேலும், மக்களின் தேவையறிந்து அவர்கள் பயன் பெறும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, கூத்தாநல்லூர் தாசில்தார் மலர்க்கொடி, உதவி செயற்பொறியாளர் இளஞ்சேரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக வடுவூர் அருகே உள்ள கட்டக்குடி, காரக்கோட்டை, செருமங்கலம் ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்க பணிகளை அமைச்சர் காமராஜ்் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்வாசுகிராமன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Next Story