எனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம் டி.கே.சிவக்குமார் பேட்டி


எனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம் டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 6:58 PM GMT)

எனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு, 

எனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

படிப்பதை விட்டுவிட்டேன்

எதிர்க்கட்சி தலைவர் உள்பட எந்த பதவியும் எனக்கு வேண்டாம். தற்போதைக்கு என்னை தொந்தரவு செய்யாமல் விட்டால் போதும். கட்சியில் பலர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற அவசரப்படுகிறார்கள். அத்தகையவர்கள் பதவியை பெறட்டும். கார், வீடு வாங்குபவர்கள் வாங்கட்டும். ஆனால் எனக்கு சொந்த வீடு உள்ளது. நான் எனது வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.

நாளை (அதாவது இன்று) எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் கர்நாடகம் வருகிறார்கள். தலைவர்களின் ஆலோசனைகளை கேட்டு, எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வார்கள். ஆனால் நான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. கூட்டணி அரசு கவிழ்ந்தது குறித்து தேவேகவுடா, குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் ஏதேதோ கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நான் பத்திரிகைகள் படிப்பதை விட்டுவிட்டேன். அதனால் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

தயாராக உள்ளேன்

14 மாதங்கள் முதல்-மந்திரியாக இருந்தவரின் கீழ் நான் மந்திரியாக பணியாற்றினேன். நான் நிர்வகித்த துறை பற்றி ஏதாவது குற்றச்சாட்டுகள் வந்தால் அதற்கு பதிலளிக்க நான் தயாராக உள்ளேன். அருண்ஜெட்லி மரணம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது. கர்நாடகத்தின் நலனில் அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார். சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது பல விஷயங்கள் பற்றி அவரிடம் நான் பேசியிருக்கிறேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story