போராட்டத்தின் போது அத்துமீறி நடந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகள் கூட்டியக்க கூட்டத்தில் தீர்மானம்


போராட்டத்தின் போது அத்துமீறி நடந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகள் கூட்டியக்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 7:03 PM GMT)

காமநாயக்கன்பாளையம் அருகே உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அத்துமீறி நடந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டியக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காமநாயக்கன்பாளையம்,

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த உள்ளன. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், எனவே சாலையோரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் விவசாயிகளின் போராட்டங்களை சிறிதும் கண்டு கொள்ளாமல், விவசாய நிலங்கள் வழியாக உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காமநாயக்கன்பாளையத்தை அடுத்த வாவிபாளையம் சாலையூர், கழுவேறிபாளையம், காளியப்பன்கவுண்டன்புதூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் விவசாயிகள் விரைந்து சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அது போல் பெண்களையும் குண்டு கட்டாக தூக்கிச்சென்று அப்புறப்படுத்தினர். திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், விவசாயிகளிடம் சட்ட விதிமுறைகளை மீறி அராஜகமாக நடந்து கொண்டதாகவும், பெண்களிடம் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வசைபாடியதாகவும், மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அத்து மீறி நடந்து கொண்டதாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த செயலை கண்டித்து வாவிபாளையத்தில் உள்ள விவசாயி வரதராஜன் என்பவரது தோட்டத்தில் உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு மூத்த விவசாயி வெங்கடாசலம் தலைமை தாங்கினார். வாவிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் திருப்பூர் கே.சுப்பராயன் எம்.பி. பேசும்போது “ விவசாயிகளை காக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக செயல் படுகின்றன. நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய கோரிக்கை வைத்து பேசினேன். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை ரத்து செய்தது. இந்த மக்கள் விரோத ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் என யாரும் நிம்மதியாக இல்லை. விவசாயம் அழிந்து வருகிறது. வளர்ச்சிதிட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் விளைநிலங்களை பிடுங்குவது என்ன நியாயம். இந்த பகுதியில் நடந்த அடக்குமுறை, அத்துமீறல், சம்பவங்கள் முதல்-அமைச்சருக்கு தெரியாதா? ஏன் இன்னும் அத்துமீறி செயல்பட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை பணியிடை நீக்கம் செய்ய வில்லை. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரை சந்தித்து புகார் தர உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வாவிபாளையம் காளியப்பகவுண்டன் புதூர் பகுதியில் உயர் அழுத்த மின்கோபுரங்களுக்கு நில அளவை செய்ய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பெண்களிடம் மிக மோசமான முறையில் நடந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனித உரிமைகளை மீறி செயல்பட்ட போலீசாரின் செயலுக்கு வன்மையான கண்டனம் தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கோவை பி.ஆர்.நடராஜன் எம்.பி., உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் கு.செல்லமுத்து, அரசியல் கட்சி நிர்வாகிகள் புத்தரச்சல் மணி, கொங்கு ராஜேந்திரன், மதுசூதனன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சோமசுந்தரம், வெங்கடாசலம், சுப்பிரமணியம், ஈஸ்வரன், பொன்னையன், சிவகுமார் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story