கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு, தொழிலாளர்களை அதிகளவில் ஏற்றி செல்லும் ஜீப்களால் விபத்து


கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு, தொழிலாளர்களை அதிகளவில் ஏற்றி செல்லும் ஜீப்களால் விபத்து
x
தினத்தந்தி 26 Aug 2019 3:15 AM IST (Updated: 26 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு தோட்ட தொழிலாளர்களை அதிகளவில் ஏற்றி செல்லும் ஜீப்புகளால் விபத்து ஏற்படுகிறது.

கம்பம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, சக்குப்பள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை பகுதிகளில் ஏலக்காய், தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களுக்கு தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட ஜீப்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

காலையில் வேலைக்கு செல்லும்போதும், மாலை வேலை முடித்து திரும்பும் போதும் அதிகளவில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப்கள் அதிவேகமாக செல்கின்றன.

ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கம்பம் மெட்டு மலைப்பாதையில் இந்த ஜீப்புகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் பலர் உயிரிழந்ததுடன், சிலர் கை, கால்களையும் இழந்துள்ளனர். இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் முழுமையாக தடுக்க முடியவில்லை.

கேரளாவிற்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் செல்லும் ஜீப்புகளில் அதிகப்பட்சமாக 12 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். டிரைவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு வேகத்தில் மட்டுமே ஜீப்பில் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் இதை கடைப்பிடிப்பது கிடையாது. இதனால் தான் விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

எனவே ஜீப்களில் அதிகளவில் தொழிலாளர்களை ஏற்றி செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Next Story