2-ம் நிலை காவலர் தேர்வை 19,583 பேர் எழுதினர்; போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்


2-ம் நிலை காவலர் தேர்வை 19,583 பேர் எழுதினர்; போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்
x
தினத்தந்தி 26 Aug 2019 3:15 AM IST (Updated: 26 Aug 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த 2-ம் நிலை காவலர் தேர்வை 19 ஆயிரத்து 583 பேர் எழுதினர். தேர்வு மையங்களை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.

காட்பாடி, 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்கள், சிறைக்காவலர்கள் பணிக் கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 20,602 ஆண்கள், 2,983 பெண்கள் என 23 ஆயிரத்து 585 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 4 மையங்கள், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2 மையங்கள், சன்பீம், சிருஷ்டி பள்ளிகளில் தலா ஒரு மையங்கள் என 8 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று 10.30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது.

விண்ணப்பித்தவர்களில் 4,002 பேர் தேர்வு எழுத வரவில்லை. 19 ஆயிரத்து 583 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், விஜயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்வை கண்காணிக்க மைய கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையத்தில் ஆய்வு செய்து தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா? என்பது குறித்து கண்காணித்தனர்.

தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தேர்வு அறைகள் கண்காணிக்கப்பட்டன. தேர்வு மையங்களில் குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மேல்பாடியை அடுத்த சின்ன கீசகுப்பத்தை சேர்ந்த அசோகன் என்ற வாலிபர் தேர்வு எழுத வந்தார். தேர்வு மையத்தில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக தேர்வர்கள் இதுகுறித்து உடனடியாக மைய கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அசோகனை அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Next Story