குடிமராமத்து பணிகளில் முழு உணர்வுடன் செயல்பட வேண்டும்; அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு


குடிமராமத்து பணிகளில் முழு உணர்வுடன் செயல்பட வேண்டும்; அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2019 3:45 AM IST (Updated: 26 Aug 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து பணிகளில் அதிகாரிகள் முழு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் ஜல்சக்தி அபியான் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 220 ஏரிகள், 461 குளம், குட்டைகள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 53 ஏரிகளை தூர்வாரி சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணித்திட மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று ஏரிகளில் நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்யவேண்டும். இந்த ஆய்வின்போது ஏரிப்பாசன ஆயக்கட்டுதாரர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் எத்தனை நபர்கள் உள்ளனர் என்பதை அறிந்து அவர்களுடன் தூர்வாரும் பணிகள் குறித்து கலந்துரையாடிய பின்னர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும்.

ஆயக்கட்டுதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதை ஆவணம்படுத்திட வேண்டும். சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் நிலங்கள் வைத்துள்ளனரா என்பதை பட்டா, சிட்டாவை வைத்து ஒரு பதிவேட்டை உருவாக்கி உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

பணிகள் மேற்கொள்ளும்போது ஏரியில் கருவேல மரம், சீமகருவேல மரங்களை அகற்றுதல், ஏரிக்கரையில் கரையை பலப்படுத்துதல், மதகு முன்புறம் உள்ள கால்வாயை தூர்வாரி சாய்வு கற்கள் அமைத்தல், ஏரியின் நீர்ப்பிடிப்பு எல்லையை நிர்ணயிக்க அளவீடு செய்து எல்லை கற்கள் நடுவது, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் மூலம் அகற்றிட நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த பணியின்போது ஏரிக்கரைகளின் ஓரங்களில் பனை விதைகளை நட வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து குடிமராமத்து பணியில் ஈடுபட விரும்பினால் உடனடியாக இணைந்து செயல்பட அனுமதியளிக்க வேண்டும். கிடைக்கும் மழைநீரை சேமித்து மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும், எதிர்கால சந்ததியினருக்கு நீர் ஆதாரத்தினை வழங்கிடவும் குடிமராமத்து பணிகளில் அதிகாரிகள் முழு உணர்வுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி கலெக்டர்கள் மெகராஜ், இளம்பகவத், பிரியங்கா பங்கஜம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தனபால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story