சட்டவிரோதமாக வைக்கப்பட்டமின்வேலியில் சிக்கி விவசாயி பலி - மகன் கண் முன்னே பரிதாபம்


சட்டவிரோதமாக வைக்கப்பட்டமின்வேலியில் சிக்கி விவசாயி பலி - மகன் கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:00 PM GMT (Updated: 25 Aug 2019 7:06 PM GMT)

சேத்துப்பட்டு அருகே காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்க வயலில் சட்டவிரோதமாக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நிலஉரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டு அருகே உள்ள மேலபூண்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45), விவசாயி. இவருக்கு லீலா என்ற மனைவியும், தமிழ்செல்வன், சுதாகர் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். நேற்று அதிகாலை நடராஜன் தன்னுடைய இளைய மகன் சுதாகருடன் அந்த பகுதியில் உள்ள கோவிந்தசாமி என்பவரின் நிலத்தின் அருகே ஈசல் பிடிக்க சென்றார்.

அங்கே வேர்க்கடலை செடிகளுக்கு இடையே பன்றிகளுக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் எதிர்பாராத விதமாக நடராஜன் சிக்கினார். அப்போது “மின்வேலி உள்ளது, இங்கிருந்து ஓடி விடு” என்று நடராஜன் தனது மகன் சுதாகரிடம் கூறியுள்ளார்.

மேலும் நடராஜன் மின்சாரம் தாக்கி சுதாகர் கண்முன்னே துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சுதாகர் அழுதபடி ஊருக்குள் ஓடி வந்து தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஊர் மக்கள் மின்சாரத்தை துண்டித்து நடராஜனின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து லீலா சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து இருந்த கோவிந்தசாமியை தேடி வருகின்றனர்.

Next Story