‘தன்னிச்சையாக இலாகாக்களை கூட ஒதுக்க முடியவில்லை’ அதிகாரம் பறிப்பால் எடியூரப்பா கடும் அதிருப்தி


‘தன்னிச்சையாக இலாகாக்களை கூட ஒதுக்க முடியவில்லை’ அதிகாரம் பறிப்பால் எடியூரப்பா கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 7:06 PM GMT)

தன்னிச்சையாக இலாகாக்களை கூட ஒதுக்க முடியவில்லை என்று வேதனைப்பட்டுள்ள எடியூரப்பா, அதிகாரம் பறிப்பால் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு, 

தன்னிச்சையாக இலாகாக்களை கூட ஒதுக்க முடியவில்லை என்று வேதனைப்பட்டுள்ள எடியூரப்பா, அதிகாரம் பறிப்பால் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

25 தொகுதிகளில் வெற்றி

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்கள் நடைபெற்றது. அறுதி பெரும்பான்மை பலத்திற்கு (ஆட்சி அமைக்க 113 எம்.எல்.ஏ.க்கள் தேவை) அருகில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை (105) இருந்ததால், அக்கட்சி தலைவர்கள் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். 14 மாதங்களில் பல முறை இந்த முயற்சி நடந்தது. ஆனால் 4, 5 முறை பா.ஜனதா தலைவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சி தோல்வி அடைந்தது.

கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் எனறு பா.ஜனதாவினர் வெளிப்படையாகவே கூறி வந்தனர். தாங்கள் மேற்கொள்ளும் ‘ஆபரேஷன் தாமரை‘ பற்றி வெளிப்படையாக கூறியது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டதால், கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியை பா.ஜனதா தலைவர்கள் சிறிது காலம் ஒத்திவைத்தனர். அந்த தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு வரலாறு காணாத வெற்றி அதாவது 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதில் அக்கட்சி தலைவர்கள் உற்சாகமாக ஈடுபட்டனர்.

ரகசியமாக நிறைவேற்றினர்

இந்த முறை கூட்டணி ஆட்சியை கவிழ்த்தே தீர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மிக சிறப்பாக செயல்பட்ட பா.ஜனதாவினர் யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை மிக மிக ரகசியமாக நிறைவேற்றினர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேரும் என 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.

ராஜினாமா செய்தவுடன் ராஜ்பவனுக்கு சென்று கவர்னருக்கு தகவல் தெரிவித்த அவர்கள், தனி விமானத்தில் மும்பைக்கு பறந்து சென்றனர். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. கடைசியில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி குமாரசாமி அரசு கவிழ்ந்தது. 26-ந் தேதி கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார்.

17 பேர் மந்திரிகள்

கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். தங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே எடியூரப்பா பதவி ஏற்று 25 நாட்களுக்கு பிறகு கடந்த 20-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

அவர்கள் பதவி ஏற்று ஒரு வாரமாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் எந்த பணியும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே எந்த பதவியிலும் இல்லாத லட்சுமண் சவதிக்கு மந்திரி பதவி வழங்கியதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்திக்க டெல்லிக்கு சென்றனர். ஏனென்றால் லட்சுமண் சவதி 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மகேஷ் குமடள்ளி வெற்றி பெற்று, தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினருக்கு மந்திரி பதவி

இதையடுத்து எடியூரப்பா கடந்த 23-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து, உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும், அமித்ஷாவை சந்தித்தால் அது வேறுவிதமான சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் சமாதானம் கூறினார். அப்போது, தங்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டப்படி முக்கியமான இலாகாவுடன் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், தங்களுக்கு இல்லை என்றால் தங்களின் குடும்பத்தினருக்கு பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனால் என்ன செய்வது என்று புரியாமல் எடியூரப்பா சிக்கலில் மாட்டியுள்ளார். குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வழங்க இயலாது என்றும், சுப்ரீம் கோர்ட்டில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் உடனே மந்திரி பதவி வழங்குவதாகவும் உறுதியளித்தார். 3 துணை முதல்-மந்திரிகளை நியமனம் செய்வது குறித்து ஆலோசித்து வரும் பா.ஜனதா மேலிடம், அதுவும் தாங்கள் கூறுபவருக்கே வழங்க வேண்டும் என்று சொல்கிறது. இதை ஏற்க எடியூரப்பா மறுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜினாமா செய்ய தயார்

பா.ஜனதா மேலிடத்தின் அனுமதி பெற வேண்டியிருப்பதால், புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீட்டில் கூட தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்று எடியூரப்பா மிகுந்த வேதனையுடன் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எடியூரப்பா டெல்லி சென்றாலும் அவரை அமித்ஷா சந்திப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியில் தனக்கு மதிப்பு இல்லை, முதல்-மந்திரி பதவியில் இருந்தாலும் உரிய அதிகாரம் இல்லை என்று எடியூரப்பா வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பெங்களூருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி ஒருவரை சந்தித்து எடியூரப்பா பேசுகையில், தான் முதல்-மந்திரி பதவியில் இருந்தாலும் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும், டெல்லிக்கு சென்றாலும் தனக்கு அவமானம் இழைக்கப்படுவதாகவும், இந்த நிலை நீடித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

பாலச்சந்திர ஜார்கிகோளி

உடனே அந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி, அமித்ஷாவை தொடர்பு கொண்டு பேசி, எடியூரப்பாவின் வேதனையை எடுத்துக்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அரசு இன்னும் சுமுகமாக செயல்படும் நிலை இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மந்திரி பதவி கிடைக்காதவர்களை சமாதானப்படுத்த மந்திரிசபை விரிவாக்கம் மீண்டும் நடைபெற உள்ளதாகவும், அப்போது உமேஷ்கட்டி, ரேணுகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிருப்தியில் உள்ள பாலச்சந்திர ஜார்கிகோளிக்கு கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பதவி வழங்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ஆட்சியை பெரிய சிக்கல் இன்றி நடத்த முடியும் என்று எடியூரப்பா நம்புகிறார். அடுத்து வரும் நாட்களில் தான், எடியூரப்பா அரசின் நிலைத்தன்மை குறித்து தெரியவரும்.

Next Story