வாணாபுரம் அருகே, கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


வாணாபுரம் அருகே, கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Aug 2019 3:45 AM IST (Updated: 26 Aug 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாணாபுரம், 

வாணாபுரம் அருகே உள்ள அகரம் பள்ளிப்பட்டில் கிழக்கு தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, பள்ளிக்கூடத்தெரு, கோவில் வீதி, தண்டராம்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கடும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் தொற்று நோயால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தண்டராம்பட்டு - திருவண்ணாமலை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வாணாபுரம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story