அரசு பஸ்சில் பயணம் செய்த போது மூதாட்டிக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து 16 பவுன் நகை அபேஸ்; பக்கத்தில் அமர்ந்து இருந்த மர்ம பெண் கைவரிசை


அரசு பஸ்சில் பயணம் செய்த போது மூதாட்டிக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து 16 பவுன் நகை அபேஸ்; பக்கத்தில் அமர்ந்து இருந்த மர்ம பெண் கைவரிசை
x
தினத்தந்தி 25 Aug 2019 11:30 PM GMT (Updated: 25 Aug 2019 7:10 PM GMT)

அரசு பஸ்சில் பயணம் செய்த மூதாட்டிக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து 16 பவுன் நகையை மர்ம பெண் ஒருவர் அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம்,

கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கெடிசுந்தரம். இவருடைய மனைவி கல்யாணி (வயது 67). இவர்களுடைய மகள் திருப்பூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கல்யாணி திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக தஞ்சாவூரில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ் திருச்சி பஸ் நிலையம் சென்றதும், அங்கு ஒரு பெண், பஸ்சில் ஏறி கல்யாணி இருக்கையின் அருகில் அமர்ந்தார். அந்த பஸ் மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பஸ்நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அங்கு கல்யாணியின் அருகில் அமர்ந்திருந்த பெண் திடீரென்று பஸ்சை விட்டு இறங்கி சென்று விட்டார்.

அதன்பின்னர் அந்த பஸ் வெள்ளகோவிலை கடந்து காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓலப்பாளையம் அருகே பஸ் செல்லும்போது கல்யாணி தன்னுடைய கழுத்தில் இருந்த 16 பவுன் நகையை காணாததால் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையில் அவர் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணையும் காணாததால் கூச்சல்போட தொடங்கினார். அதற்குள் பஸ் காங்கேயம் பஸ்நிலையம் சென்று விட்டது.

இதை தொடர்ந்து டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மூதாட்டியை கீழே இறக்கி, பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வனிடம், நடந்த விவரத்தை கல்யாணி தெரிவித்தார். இதை தொடர்ந்து பஸ்சில் என்ன நடந்தது? என்று கல்யாணியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் கூறியதாவது:- பஸ்சில் என் அருகில் அமர்ந்திருந்த பெண் என்னுடன் பேசிக்கொண்டே வந்தார். வரும்போது உண்பதற்கு பிஸ்கெட் கொடுத்தார். நான் வேண்டாம் என்று கூறியும் வற்புறுத்தி கொடுத்ததால் வாங்கி சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அதன்பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. காங்கேயம் வரும் வழியில் தான் எனக்கு மயக்கம் தெளிந்தபோது கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் வளையல் என மொத்தம் 16 பவுன்நகையை காணாமல் திடுக்கிட்டேன். அந்த பெண் எனக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து நகையை பறித்து சென்று உள்ளார். இதுபற்றி கண்டக்டரிடம் கூறியபோது உங்கள் அருகில் இருந்த பெண் வெள்ளகோவிலில் இறங்கி விட்டார் என்று தெரிவித்தார். இவ்வாறு போலீசாரிடம் அழுது கொண்டே கல்யாணி கூறினார்.

கல்யாணியின் அருகில் இருந்த பெண் வெள்ளகோவிலில் இறங்கி உள்ளதால் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் அந்த மர்ம பெண்ணின் உருவம் பதிவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், எனவே வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்படியும் போலீசார் கல்யாணியிடம் கூறினர்.

இதனிடையே திருப்பூரில் உள்ள கல்யாணியின் மகள் செல்போன் எண்ணை வாங்கி கண்டக்டர் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். அப்போது அவர், தனது தாயை திருப்பூர் அழைத்து வரும்படி கூறினார். இதையடுத்து அதே பஸ்சில் கல்யாணியை திருப்பூருக்கு அழைத்து சென்றனர். ஓடும் பஸ்சில் மூதாட்டிக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து 16 பவுன்நகையை மர்ம பெண் அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story