பட்ஜெட் கூட்டத்தொடர்: புதுவை சட்டசபை இன்று கூடுகிறது - கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்


பட்ஜெட் கூட்டத்தொடர்: புதுவை சட்டசபை இன்று கூடுகிறது - கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்
x
தினத்தந்தி 26 Aug 2019 4:30 AM IST (Updated: 26 Aug 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை இன்று(திங்கட்கிழமை) கூடுகிறது. இதில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்.

புதுச்சேரி,

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி புதுச்சேரி சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார். தொடர்ந்து 28-ந்தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.8 ஆயிரத்து 425 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவ பேரம் பேசியதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜெ.ஜெயபால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரி அரசியல் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

பட்ஜெட்டிற்கு மத்திய உள்துறை ஒப்புதல் தருவதில் தாமதமானதால், பட்ஜெட் கூட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் 31-ந்தேதிக்கு முன்பாக, பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே துறைவாரியாக விவாதம் நடத்தாமல் பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் நெருக்கடி தர முடிவு செய்துள்ளன.

எனவே கவர்னர் உரை முடிவடைந்ததும் ஒரு மாதம் அல்லது 2 மாதங்களுக்கான அரசு செலவினங்களுக்கு சட்டசபையில் அனுமதி பெற்றுவிட்டு அதன் பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக நேற்றுக்காலை அவர் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து பேசினார்.

Next Story