கவர்னர் கிரண்பெடியுடன், ரங்கசாமி திடீர் சந்திப்பு; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நகலை வழங்கினார்


கவர்னர் கிரண்பெடியுடன், ரங்கசாமி திடீர் சந்திப்பு; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நகலை வழங்கினார்
x
தினத்தந்தி 25 Aug 2019 11:15 PM GMT (Updated: 25 Aug 2019 7:17 PM GMT)

கவர்னர் கிரண்பெடியை, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று இரவு திடீரென சந்தித்து பேசினார். அப்போது அவர் சட்டசபை சபாநாயகர் மீது கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மான நகலை கவர்னரிடம் வழங்கினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கடந்த 20-ந் தேதி சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரை சந்தித்தனர். அப்போது அவர்கள் சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கடிதத்தை கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ரங்கசாமி ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரங்கசாமி நேற்று இரவு 8-30 மணிக்கு புதுவை கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்பின்போது சபாநாயகர் சிவக்கொழுந்து மீது கொண்டு வர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நகலை, கவர்னரிடம் ரங்கசாமி வழங்கினார்.

பின்னர் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘நாளை (அதாவது இன்று) சட்டசபை கூட உள்ளதால் கவர்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்’ என்று கூறினார். உடனே நிருபர்கள், “சபாநாயகர் மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதுவும் பேசினீர்களா? என கேட்டபோது, பதில் அளிக்காமல் ரங்கசாமி சென்றுவிட்டார்.

அதே சமயம் புதுவை கவர்னர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, கவர்னர் கிரண்பெடியுடன் சந்தித்தபோது சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தின் நகலை வழங்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜெ.ஜெயபால் நேற்றுக்காலை சட்டசபை செயலாளர் அலுவலகத்திற்கு சென்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் அங்கு செயலாளர் இல்லை. உடனே அவர் சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரை செல்போனில் தொடர்பு கொண்டு தங்களிடம் மனு கொடுக்க வேண்டும், அதற்காக உங்கள் அலுவலகத்துக்கு வந்துள்ளேன் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து செயலாளர் வின்சென்ட்ராயர் சட்டசபைக்கு வந்தார். அங்கு சபாநாயகர் அறையில் வைத்து, என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்.எல்.ஏ.விடம் மனுவை பெற்றுக்கொண்டார். அப்போது வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார். இது தொடர்பாக என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது, அவர் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்.எல்.ஏ. மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு ஆளும் கட்சி வந்துள்ளதால், அதை தவிர்க்கும் வகையில் அவர் தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Next Story