கரூர் மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வை 2,436 பேர் எழுதினர் 547 பேர் வரவில்லை


கரூர் மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வை 2,436 பேர் எழுதினர் 547 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 8:12 PM GMT)

கரூர் மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வினை 2,436 பேர் எழுதினர். 547 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு கரூர் வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அதன் அருகே உள்ள அட்லஸ் கலையரங்கில் நடந்தது. இதையொட்டி காலை 7 மணி முதலே தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அந்த மையத்துக்கு வரத்தொடங்கினர்.

செல்போன், மின்னணு கைக்கடிகாரம், புளுடூத், கால்குலேட்டர் மற்றும் மின்சாதன உபகரணங்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு எழுத வந்தவர்கள், தேர்வு மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

547 பேர் தேர்வெழுத வரவில்லை

காலை 10 மணியளவில் தொடங்கிய தேர்வானது காலை 11.20 மணியளவில் நிறைவடைந்தது. தேர்வு மையத்திற்குள் வெளிநபர்கள் யாரும் நுழைந்து விடாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் தேர்வு மையத்தை பார்வையிட்டு தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? தேர்வு எழுதியவர்களுக்கு போதிய வசதிகள் உள்ளதா? என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் 2,490 ஆண்கள், 493 பெண்கள் என காவல்துறை பணிக்கான எழுத்து தேர்வை எழுதுவதற்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 2,132 ஆண்கள், 304 பெண்கள் என 2,436 பேர் தேர்வில் பங்கேற்றனர். 547 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story