இருசக்கர வாகனத்தில் சென்றவர் கிணற்றில் விழுந்து பலி; செல்போன் பேசியபடி ஓட்டியதால் பரிதாபம்


இருசக்கர வாகனத்தில் சென்றவர் கிணற்றில் விழுந்து பலி; செல்போன் பேசியபடி ஓட்டியதால் பரிதாபம்
x
தினத்தந்தி 26 Aug 2019 3:15 AM IST (Updated: 26 Aug 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்றவர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் அழகுமுருகன்(வயது 38). இவர் மேலஒட்டம்பட்டியில் இருந்து சாத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால் அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டியபடியே சட்டை பையில் இருந்த செல்போனை எடுத்து பேசினார்.

சிறிது தூரம் சென்றபோது அவர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறியது. இதில் சாலையோரம் இருசக்கர வாகனத்துடன் அவர் விழுந்தார். அப்போது அங்கிருந்த திறந்த வெளி கிணற்றுக்குள் அவர் தவறி உள்ளே விழுந்தார். பயன்படுத்தப்படாத அந்த கிணற்றில் விழுந்த அவர் பலத்த காயம் அடைந்ததாக தெரிகிறது.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி அவரை தேடினர். ஆனால் அவர் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செல்போன் பேசியபடியே செல்லக்கூடாது என போலீசார் வலியுறுத்தி வந்தாலும் அதை யாரும் பின்பற்றுவது இல்லை. அது விபத்துக்கு வழிவகுத்து விடும் என்பது அழகுமுருகன் விஷயத்தில் நிரூபணம் ஆகிவிட்டது.

Next Story