நெல்லை மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 18,320 பேர் எழுதினர்


நெல்லை மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 18,320 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 26 Aug 2019 4:00 AM IST (Updated: 26 Aug 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 18 ஆயிரத்து 320 பேர் எழுதினர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 18 ஆயிரத்து 320 பேர் எழுதினர்.

காவலர் பணிக்கான எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை அண்ணா பல்கலைக்கழக வளாகம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரி, தியாகராஜநகர் புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்புரம் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி, சங்கர்நகர் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வீரகேரளம்புதூர் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரி உள்பட 17 மையங்களில் தேர்வு நடந்தது.

திருநங்கை தேர்வு எழுதினார்

மேலும் நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலைக்கல்லூரி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி ஆகிய 4 மையங்களில் பெண்கள் மட்டும் தேர்வு எழுதினர். ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் ஒரு திருநங்கை தேர்வு எழுதினார். தேர்வை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கியது. இளைஞர்கள் காலை 9 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்து நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஒவ்வொருவரின் நுழைவு சீட்டு சரிபார்க்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுப்பப்பட்டனர்.

கால்குலேட்டர், செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை இளைஞர்கள் கொண்டு வந்து இருந்தனர். அவற்றை போலீசார் வாங்கி பாதுகாப்பாக வைத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்டார்.

தேர்வு பாதுகாப்பு பணியில் சுமார் 1,000 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். தேர்வு காலை 11.15 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வுக்கு நெல்லை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 472 ஆண்கள், 3 ஆயிரத்து 423 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 ஆயிரத்து 896 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3,576 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 18 ஆயிரத்து 320 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.


Next Story