மதுபானம் விற்க அனுமதிக்கக்கோரி, சாலையில் பிணம்போல் படுத்து மறியல் செய்த கண்பார்வையற்ற முதியவர்
வருசநாட்டில் மதுபானம் விற்க அனுமதிக்கக்கோரி, சாலையில் பிணம்போல் படுத்து கண் பார்வையற்ற முதியவர் மறியலில் ஈடுபட்டார்.
கடமலைக்குண்டு,
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் மந்திராஜா (வயது 70). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கண் பார்வையை இழந்தார். இதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. எனவே வருமானத்துக்காக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி, அதனை கூடுதல் தொகைக்கு விற்பனை செய்ய தொடங்கினார்.
இதனையறிந்த வருசநாடு போலீசார், மந்திராஜாவிடம் மதுபாட்டில் விற்பனை செய்ய கூடாது என பலமுறை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதால், கடந்த சில நாட்களாக மந்திராஜா மது விற்பனை செய்ய முடியவில்லை.
இதனால் நேற்று மதுபாட்டில் விற்பனை செய்ய அனுமதிக்கக்கோரி, கழுத்தில் மாலை அணிந்து பிணம் போல வருசநாடு-வாலிப்பாறை சாலையில் படுத்து மந்திராஜா மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பாண்டியன் தலைமையிலான போலீசார், மந்திராஜாவை வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
மேலும் போலீஸ் நிலையத்துக்கு அவருடைய உறவினர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை எச்சரித்து மந்திராஜா அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே கண்பார்வை இழந்து வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் மந்திராஜாவுக்கு, அரசு சார்பில் உதவிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story