வேடசந்தூர் அருகே, கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்தது - தம்பதி உயிர் தப்பினர்


வேடசந்தூர் அருகே, கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்தது - தம்பதி உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 26 Aug 2019 4:15 AM IST (Updated: 26 Aug 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே சமையல் செய்யும்போது கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்து பொருட்கள் நாசமடைந்தன. தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள தோப்புப்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கராஜ். இவர் வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் குன்னம்பட்டி பிரிவு அருகே சூர்யா கார்டன் என்ற இடத்தில் புதிதாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறார். அந்த பகுதியில் உள்ள காலியிடத்தில் தற்காலிகமாக குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல குடிசை வீட்டில் தங்கராஜின் மனைவி தனலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. குடிசையில் தீப்பிடித்ததை அறிந்த கணவன்-மனைவி இருவரும் உடனே வீட்டை விட்டு வெளியே வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் குடிசையில் இருந்த சிமெண்டு மூட்டைகள் மற்றும் பையில் வைத்திருந்த ரூ.28 ஆயிரம், மொபட், கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மருதை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடிசை முழுவதும் தீயில் கருகிவிட்டது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story