பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகாரி ஆய்வு


பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 25 Aug 2019 9:30 PM GMT (Updated: 25 Aug 2019 8:18 PM GMT)

பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

ஊத்துக்கோட்டை, 

பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுகிறது.

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். அதன்படி ஜனவரி முதல் மார்ச் வரை 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததால் மார்ச் மாதம் 26-ந்தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பூண்டியில் இருந்து தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தப்பட்டது. கோடை வெயில் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்து இல்லாததால் பூண்டி ஏரி வறண்டது. இதையடுத்து அதிகாரிகள் ரெயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சென்னையில் குடிநீர் வினியோகித்து வருகின்றனர்.

மேலும் விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டியை சில நாட்களுக்கு முன் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது அந்த அணையில் வெறும் 3 டி.எம்.சி. தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. மழை பெய்து சோமசீலா அணையில் இருந்து தண்ணீர் வந்து சேர்ந்தவுடன் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி உறுதி அளித்தார். அதே போல் சோமசீலா அணை நீர் தேக்கப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்டலேறு அணைக்கு எப்போது வந்து சேரும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது. கண்டலேறு அணையில் இருந்து 177 கிலோ மீட்டர் தூரத்தில் பூண்டி ஏரி உள்ளது. இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேற்று முன்தினம் மாலை பூண்டி ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் தங்கு தடையின்றி தண்ணீர் பாய்ந்து வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அவர் ஏரியில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள 5 கண் மதகு, 19 கண் மதகுகளில் உள்ள ஷர்ட்டர்கள் நன்றாக உள்ளதா? முறையாக இயக்கப்படுகிறதா? என்பதை சோதனை செய்தார். இதை தொடர்ந்து ஏரியில் உள்ள நீர் உள்வாங்கி கோபுரத்தை ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வர இருப்பதையொட்டி முன்னெச்சரிக்கையாக ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Next Story