தீபாவளி பண்டிகைக்காக இளைஞர், சிறுவர்களை கவரும் வகையில் வெடிகள் தயாரிக்கும் பணி மும்முரம்; ஆர்டர் குவிவதால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சி


தீபாவளி பண்டிகைக்காக இளைஞர், சிறுவர்களை கவரும் வகையில் வெடிகள் தயாரிக்கும் பணி மும்முரம்; ஆர்டர் குவிவதால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Aug 2019 4:00 AM IST (Updated: 26 Aug 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்காக இளைஞர்கள், சிறுவர்களை கவரும் வகையில் வெடிகள் தயாரிக்கும் பணி தற்போது வேகமெடுத்து உள்ளது. ஆர்டர் குவிவதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு கிட்டத்தட்ட 2 மாதங்களே உள்ளதால் ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. காற்று மாசு ஏற்படுவதை குறைக்கும் வகையில் இந்த ஆண்டு பட்டாசுகளை ஆலைகள் தயாரித்து வருகின்றன. இந்த வருட உற்பத்தி 4 மாதம் தாமதமாக தொடங்கப்பட்டதால் உற்பத்தியில் சற்று பாதிப்பு இருந்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் பட்டாசு உற்பத்தி தற்போது ‘ராக்கெட் வெடி’ போன்று அதிவேகமெடுத்து உள்ளது.

வடமாநில வியாபாரிகள் 70 சதவீதம் பேர் சிவகாசிக்கு வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை ஆர்டர் கொடுத்து பெற்று சென்று விட்டனர். தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களுக்கு ஆர்டர் வந்து குவிவதால், அங்கும் பட்டாசுகளை ஆலைகள் அனுப்பி வருகின்றன. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய பட்டாசுகளை அறிமுகம் செய்கின்றன. இந்த வருடம் காலதாமதமாக உற்பத்தியை தொடங்கியதால் புதிய ரக பட்டாசுகளை போதிய அளவில் தயாரிக்க முடியவில்லை. இருந்தாலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் கவருவதற்காகத்தான் புதிய ரக பட்டாசுகள் தயாரிப்பது வழக்கம்.

எனவே பேன்சி வெடிகள் தயாரிக்கும் பணியில் சிவகாசி பட்டாசு ஆலைகள் மும்முரம் காட்டி வருகின்றன. வானத்தில் வர்ணஜாலங்கள் நிகழ்த்தும் பேன்சி வெடிகள் தான் தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. விலை அதிகம் என்றாலும் பல வண்ணங்களில் வெடித்து சிதறும் இந்த வெடிகளைத்தான் அதிக அளவில் விரும்புகின்றனர்.

அதேவேளையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகம் விரும்பும் கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் கணேசமூர்த்தி கூறியதாவது:-

கிப்ட் பாக்ஸ் பட்டாசுகளுக்கு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகம் ஆசைப்படுவார்கள். கிப்ட் பாக்சில் பலதரப்பட்ட வெடிகள் இருக்கும். விலைக்கு தகுந்தார்போல் நாங்கள் வடிவமைப்போம். தற்போது இந்த கிப்ட் பாக்சில் சேர்க்கப்படும் பல வெடிகள் உற்பத்தி செய்வதில் நேரம் செலவிடுவதை விட பேன்சி ரக வெடிகள் உற்பத்தி செய்வதில் தான் ஆர்வம் காட்டப்படுகிறது.

அதே நேரத்தில் கிப்ட் பாக்சில் சிறிய பேன்சி ரக வெடிகளும் வைக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு கிப்ஸ் பாக்ஸ்கள் அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும். கிப்ட் பாக்ஸ் வெடிகள் ரூ.300 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான விலையில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகி விநாயகமூர்த்தி கூறும்போது, “இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனை நல்ல முறையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. சிலர் அனுமதி பெறாமல் வீடுகள் மற்றும் தோட்டங்களில் விதிகளை மீறி பட்டாசுகளை உற்பத்தி செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். தடை செய்யப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் போலி பட்டாசுகளும் புழக்கத்துக்கு வரலாம் என அஞ்சுகிறோம். எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து, இந்த போலி பட்டாசுகளை தடுக்க வேண்டும்” என்றார்.

Next Story