திண்டுக்கல் அருகே, குடிநீரில் மிதந்த புழுக்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி
திண்டுக்கல் அருகே குடிநீரில் புழுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சியில் கொட்டப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அவ்வப்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட நேரம் வரையே தண்ணீர் வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் கொட்டப்பட்டி ஜெயந்தி காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் காலிக்குடங்களுடன் வந்து குடிநீரை சேகரித்துக்கொண்டிருந்தனர். அப்போது குடங்களில் சேகரிக்கப்பட்ட குடிநீரில் புழுக்கள் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே மற்ற தெருக்களை சேர்ந்தவர்களும் குடிநீர் சேகரிப்பதற்காக அங்கு வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய பெண்கள், குடிநீரில் புழுக்கள் மிதப்பதாக கூறினர். இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை சேமித்து வைத்து பயன்படுத்தி வந்தோம்.
இந்த நிலையில் தற்போது வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் புழுக்கள் மிதப்பதால் அதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் எங்கள் பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.
Related Tags :
Next Story