நூதன முறையில் பணமோசடி பெண் உள்பட 4 பேர் கைது


நூதன முறையில் பணமோசடி பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 4:00 AM IST (Updated: 26 Aug 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விமானநிறுவனத்தில் வேலை

மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன்லைன் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் அவரது விவரங்களை பதிவு செய்தார். அடுத்த சில நாட்களில் ஒருவர் யோகேசை தொடர்பு கொண்டு பேசினார். அவர், யோகேசுக்கு தனியார் விமான நிறுவனத்தில் வேலை கிடைத்து இருப்பதாக கூறினார். மேலும் அதற்காக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார்.

இதனை உண்மையென நம்பிய யோகேஷ் அவர் கூறிய வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்தினார். அதன்பிறகு யோகேசுக்கு பணி நியமன கடிதம் கிடைக்கவில்லை. மேலும் அவரால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சம்பவம் குறித்து மாட்டுங்கா போலீசில் புகார் அளித்தார்.

கும்பல் சிக்கியது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த நபர் பேசிய செல்போன் எண், பணம் அனுப்பிய வங்கி கணக்கு, ஐ.பி. முகவரியை வைத்து மோசடியில் தொடர்புடைய 23 வயது பெண்ணை உத்தரபிரதேச மாநிலத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் முக்கிய குற்றவாளி சாஷத் மக்புல் (வயது26), அவரது தம்பி அமன் (24) மற்றும் அங்குஷ் சிங் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கும்பல் டெல்லியில் போலி கால்சென்டர் நடத்தி வந்துள்ளது. அவர்கள் ஆன்லைன் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் தகவல்களை திருடி, பின்னர் அந்த தகவல்கள் மூலம் யோகேசை போல நாடு முழுவதும் பலரிடம் வேலை கிடைத்து உள்ளதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. நூதன முறையில் நடந்த இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story