பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி, கோவை கிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பாதுகாப்பு


பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி, கோவை கிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 11:15 PM GMT (Updated: 25 Aug 2019 11:48 PM GMT)

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் 4-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை,

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஏராளமானோர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் மற்றும் இலங்கையை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோவையில் கடந்த 22-ந் தேதி இரவு 9 மணி முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அத்துடன் அன்று இரவே தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி கோவை வந்தார். பின்னர் அவர் கோவையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அத்துடன் அன்று இரவு முழுவதும் மாநகர பகுதி முழுவதும் கடும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சென்னையில் இருந்து 80 கமாண்டோ படை வீரர்கள் கோவை வந்தனர். அவர்களுடன் கோவையில் உள்ள துப்பாக்கி ஏந்திய 50 அதிவிரைவுப்படை வீரர்களும் இணைந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று 4-வது நாளாக தீவிர சோதனை நடந்தது.

மாநகருக்குள் வரும் அனைத்து பகுதிகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதன் காரணமாக கோவை மாநகர பகுதியில் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. குறிப்பாக கோவை கடைவீதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயம், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், உப்பிலிபாளையம் சிக்னலில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம், புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள சிரியன் சர்ச், காந்திபுரம் பாத்திமா ஆலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், போத்தனூர் ஜோசப் ஆலயம், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள டிரினிட்டி ஆலயம், கோவைப்புதூர் குழந்தை ஏசு ஆலயம் உள்பட பல ஆலயங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் ஆலயங்களுக்கு வந்தவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் அதிகமாக கூடும் ஆலயங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப்பட்டு உள்ளதா என்று சோதனை நடத்தினார்கள்.

இதுதவிர காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், போத்தனூர், திருச்சி ரோடு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. போலீஸ் உயர் அதிகாரிகள் அடிக்கடி வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவையில் விநாயகர் சிலை செய்யும் இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

கடந்த 22-ந் தேதி முதல் கோவையில் முகாமிட்டு இருந்த தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேற்று முன்தினம் இரவில் சென்னை திரும்பினார். தொடர்ந்து அவர் சென்னையில் இருந்தபடி கோவையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இங்கு நிலவி வரும் சூழ்நிலை குறித்து கேட்டறிந்து வருவதுடன், அவ்வப்போது போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

மேலும் கோவையில் உள்ள பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்களில் போலீசார் நேற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோவை மற்றும் போத்தனூர் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரெயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையே கேரளாவில் தலைமறைவாக இருந்த அப்துல் காதர் என்பவர் ஒரு பெண்ணுடன் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சித்திக் (வயது 27), உக்கடத்தை சேர்ந்த ஜாகீர் (25) ஆகியோரை மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். கேரளாவில் கைதான அப்துல்காதரிடம் அவர்கள் இருவரும் பேசியது என்ன? என்பது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக மட்டுமே பேசியதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரிடம் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வருவோம் என்று எழுதி வாங்கிவிட்டு அவர்களை விடுவித்தனர்.

எனினும் மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவர்கள் இருவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், அவர்களின் செல்போன் எண், அவர்கள் பயன்படுத்தி வரும் வலைத்தளங்கள் ஆகியவற்றையும் கண்காணித்து வருகிறார்கள். 

Next Story