திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
திண்டுக்கல் மாநகராட்சியில் 11 இடங்களில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் ரூ.15 லட்சத்தில் புதிதாக திறந்தவெளி கலையரங்கம் அமைக்கப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் திறந்தவெளி கலையரங்கம், பாண்டியன் நகரில் ரூ.10 லட்சத்தில் சுகாதார வளாகம், சிலுவத்தூர் சாலை மற்றும் பழனி சாலையில் தலா ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், ஆர்.எம்.காலனியில் ரூ.50 லட்சத்தில் சிறுவர் பூங்கா என மாநகராட்சி பகுதிகளில் 11 இடங்களில் மொத்தம் ரூ.3 கோடியே 19 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதவிர பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள், சுகாதார வளாகங்கள் மற்றும் பூங்காவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story