வேதாரண்யத்தில் சிலை உடைப்பு, கடலூர் மாவட்டம் முழுவதும் 103 அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 103 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு தரப்பினர் அங்கிருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தனர். மேலும் ஜீப் தீ வைத்தும் கொளுத்தப்பட்டதுடன் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் 103 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாகி பாவாணன், வக்கீல்கள் சபாபதி, வீரகுமார், நிர்வாகிகள் பிரகாஷ், வினோத், இமானுவேல், நடனசபாபதி, சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள், அம்பேத்கர் சிலையை உடைத்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
Related Tags :
Next Story