கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: அவினாசி, சேவூர் பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு


கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: அவினாசி, சேவூர் பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2019 4:45 AM IST (Updated: 26 Aug 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி காரணமாக அவினாசி, சேவூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேவூர்,

பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் மற்றும் இலங்கையை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதோடு வாகன சோதனை உள்பட பாதுகாப்பை பலப்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட எல்லையான சேவூர் அருகே ஆலத்தூரில் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சாலை செல்கிறது. தினசரி இந்த சாலை வழியாக மைசூரு, பெங்களூருக்கும், மறுமார்க்கமாக திருப்பூர், பழனிக்கும் இருமாநில அரசு பஸ்கள், கனரக சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

தற்போது கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருப்பதன் மூலம் இந்த சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து 5–வது நாளாக ஆலத்தூரில் நேற்று தீவிர வாகன சோதனை நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய போலீசார் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் சந்தேக நபர்கள் இருக்கிறார்களா? என சோதனை நடத்தினார்கள். அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்கு பிறகே இருவழியிலும் அனுமதிக்கப்படுகின்றன.

இதே போன்று அவினாசி தாலுகா கருணைபாளையம், நம்பியாம்பாளையம் ஆகிய கிராமங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மணல் மூடைகளை அடுக்கி வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

Next Story