உடுமலை பகுதியில் நீர்வழிப்பாதை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தின் மின்கம்பங்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


உடுமலை பகுதியில் நீர்வழிப்பாதை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தின் மின்கம்பங்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 26 Aug 2019 10:30 PM GMT (Updated: 26 Aug 2019 1:41 PM GMT)

உடுமலை பகுதியில் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தின் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உடுமலை ஆமந்தக்கடவு பகுதி பொதுமக்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் ஊரில் வாட்சன் என்னும் தனியார் நிறுவனம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிக்கான ஆயத்தபணிகளை மேற்கொண்டு வருகிறது.

 இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு செல்ல அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் அனைத்தும் நீர்வழிப்பாதை, விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை, ஓடை புறம்போக்கு வழியாக பாதையை மறித்து அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிலத்தின் வழியாக, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

காங்கேயம் தாலுகா, ஆலாம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. எங்கள் ஊருக்கு ஆழ்குழாய் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஆழ்குழாய் குடிநீர் கிடைக்கவில்லை. காவிரி கூட்டு குடிநீரும் சரிவர கிடைப்பதில்லை. எனவே குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். சம்மந்தப்பட்டவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் மற்றும் குப்பை கழிவுகள் தேங்கி அடிக்கடி அடைத்து கொள்கிறது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், குடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுபாளையத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் சொந்த வீடு இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து அந்த நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story