மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து


மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 26 Aug 2019 9:44 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் மீது கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் ஆகும். 130 ஆண்டுகளாக வங்கக்கடலில் பயணிக்கும் கப்பல்கள், படகுகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. கலங்கரை விளக்கத்தின் அருகில் கடல்சார் அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணிகள் இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி விலை உயர்ந்த கேமரா மூலம் நகரின் அழகை படம் பிடிப்பது வழக்கம். இந்த கலங்கரை விளக்கம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் அழகிய தோற்றத்தையும், புராதன சின்னங்களையும், கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தையும் கண்டுகளிக்கலாம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இவற்றை கண்டுகளிக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் முக்கிய பகுதிகளில் நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மற்றும் கடல்சார் அருங்காட்சியகம் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பு நோட்டீசும் கலங்கரை விளக்கத்தின் நுழைவு வாயில் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் இன்று கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க வந்த பயணிகள் பலரும் அறிவிப்பு நோட்டீசை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காணமுடிந்தது.

இதற்கு முன் 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அப்போது கலங்கரை விளக்கத்தில் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story