வீட்டை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


வீட்டை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 26 Aug 2019 10:20 PM IST)
t-max-icont-min-icon

வீட்டை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் கலெக் டர் அலுவலக வளாகத்தில் ஒரு பெண், மூதாட்டி மற்றும் 2 குழந்தைகளுடன் வந்து திடீரென்று பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தனது உடலிலும், மூதாட்டி மற்றும் 2 குழந்தைகளின் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைக்கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றி, அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண் தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி தனலட்சுமி (வயது 30) என்பவரும், அவருடன் அவரது குழந்தைகளான ஷோபனா (11), ராஜமுருகன் (9) மற்றும் மாமியார் நாகம்மாள் (80) ஆகியோர் வந்துள்ளனர். தனலட்சுமியின் கணவர் வேல்முருகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். தனலட்சுமி தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் கை.களத்தூர் வனப்பகுதி அருகே உள்ள சொந்த இடத்தில் வசித்து வந்தார்.

மேலும் அவருக்கு சொந்தமான குடிசை வீடு ஒன்று கை.களத்தூரில் உள்ளது. அதனை அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டை காலி செய்து தருமாறு, அந்த நபரிடம் ஏற்கனவே தனலட்சுமி கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் இது என் வீடு என்றும், வீட்டை காலி செய்ய முடியாது என தனலட்சுமியின் குடும்பத்தினரை மிரட்டினாராம். இதுதொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மனமுடைந்த தனலட்சுமி தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். இவ்வாறு கூறினர்.

இதையடுத்து தனலட்சுமி தனது வீட்டை மீட்டு தருமாறும், உயிருக்கு பாதுகாப்பு கேட்டும் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். பின்னர் போலீசார் தனலட்சுமி மற்றும் அவரது குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சைகளை அளித்து விட்டு, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Next Story