தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி


தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
x
தினத்தந்தி 27 Aug 2019 4:45 AM IST (Updated: 27 Aug 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

பவானி,

பவானியை அடுத்த ஜம்பை பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமை தாங்கினார். பவானி தாசில்தார் பெரியசாமி, பேரூராட்சி செயல் அதிகாரி செந்தில்குமரன், பவானி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செல்வி, தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு ஜம்பை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமைதி பூங்காவான தமிழகத்தில் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எனினும் உளவுத்துறையின் அறிவிப்புக்கு இணங்க வாகன சோதனைகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த ப.சிதம்பரம், இந்தியாவில் சொத்துக்களை வாங்காமல் அன்னிய நாடுகளில் சொத்து குவித்ததால் வந்த வழக்குதான் இது. இதை அவர் சந்தித்து தான் தீர வேண்டும். நாகை மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள கலவரத்தை அரசு வேடிக்கை பார்க்காது. உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பவானி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.தங்கவேல், ஜம்பை பேரூர் கழக செயலாளர் ராமசாமி, வடமலைபாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் துரை, பவானி வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம நிர்வாக அதிகாரி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story