திருப்பூரில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண் கைது


திருப்பூரில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண் கைது
x
தினத்தந்தி 27 Aug 2019 4:00 AM IST (Updated: 27 Aug 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உள்ள ஒரு மளிகை கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி மார்க்கெட்டில் மளிகை கடை வைத்துள்ளவர் ஜெய்சங்கர்(வயது 50). இவருடைய மளிகை கடைக்கு நேற்று காலை பெண் ஒருவர் வந்து மளிகை சாமான்கள் வாங்கினார். பின்னர் அதற்காக 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டை வாங்கிப்பார்த்த ஜெய்சங்கருக்கு அந்த ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமான 500 ரூபாய் நோட்டு போல் அது இல்லை. அதன் நிறம் சந்தேகப்படும் படியாக இருந்தது. இதையடுத்து மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தபோது, அசல் 500 ரூபாய் நோட்டுக்கும், அந்த பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டுக்கும் அதிக வேறுபாடு இருந்தது. இதனால் அந்த பெண் கொடுத்த 500 ரூபாய் கள்ள நோட்டு என்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த பெண்ணை பிடித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கொடுத்தது 500 ரூபாய் கள்ள நோட்டு என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் அவர் திருப்பூர் குமரானந்தபுரத்தை சேர்ந்த உமாராணி(42) என்பதும், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் உமாராணியிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் -6, 500 ரூபாய் கள்ள நோட்டுகள்-8 இருப்பதும் தெரியவந்தது. அந்த நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னிடம் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பு வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த ஒருவர் இந்த கள்ளநோட்டை கொடுத்ததாகவும், அந்த கள்ள நோட்டை கடைக்கு வந்து மாற்றும்போது சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். உமாராணியிடம் கள்ள நோட்டுக்களை கொடுத்தது யார்? என்கிற விவரங்கள் சரிவர தெரியவில்லை. கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டன, அவற்றை திருப்பூருக்கு கொண்டு வந்து புழக்கத்தில் விடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து உமாராணியை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுபோல் கள்ள நோட்டுகளை அவர் ஏற்கனவே மாற்றியுள்ளாரா? எவ்வளவு பணம் இதுபோல் புழக்கத்தில் விட்டுள்ளார்? என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ள ரூபாய் நோட்டுகளுடன் பெண் சிக்கிய சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story