எடியூரப்பா மந்திரி சபையில் 3 துணை முதல் மந்திரிகள் நியமனம் புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு


எடியூரப்பா மந்திரி சபையில் 3 துணை முதல் மந்திரிகள் நியமனம் புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு
x
தினத்தந்தி 26 Aug 2019 11:30 PM GMT (Updated: 26 Aug 2019 7:18 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக பதவி ஏற்ற மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு எடியூரப்பா மந்திரி சபையில் 3 துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து பா.ஜனதா அரசு அமைந்தது. முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து 25 நாட்களுக்கு பிறகு மந்திரிசபை கடந்த 20-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. பா.ஜனதா கட்சியை சேர்ந்த 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். பதவி ஏற்று ஒரு வாரமாகியும் புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு புதிய மந்திரிகளுக்கு நேற்று இலாகா ஒதுக்கப்பட்டது. கர்நாடக அரசு அனுப்பிய மந்திரிகளுக்கான இலாக ஒதுக்கீடு பட்டியலுக்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், லட்சுமண் சவதி ஆகிய 3 பேர் துணை முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அஸ்வத் நாராயண் முதல் முறையாக மந்திரியாகி, தற்போது துணை முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கூட்டணி அரசு கவிழ்ந்ததில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரிசபையில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஈசுவரப்பா, ஆர்.அசோக் ஆகியோருக்கு தற்போது துணை முதல்-மந்திரி பதவி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்-மந்திரி களாக அறிவிக்கப்பட்ட 3 பேரில் ஒருவரான லட்சுமண் சவதி, கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஆவார். துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் மந்திரி ஆர்.அசோக் உள்பட மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இந்த முடிவை ஏற்றே ஆக வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது. 3 துணை முதல்-மந்திரிகளில் கோவிந்த் கார்ஜோள் தலித் சமூகத்தையும், அஸ்வத் நாராயண் ஒக்கலிகர் சமூகத்தையும், லட்சுமண் சவதி லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

ஜெகதீஷ் ஷெட்டர்

1. முதல்-மந்திரி எடியூரப்பா - மந்திரிகளுக்கு ஒதுக்கப் படாத அனைத்து துறைகளும்.

2. துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் - பொதுப்பணி, கூடுதல் பொறுப்பாக சமூக நலன்

3. துணை முதல்-மந்திரி டாக்டர் அஸ்வத் நாராயண் - உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம்

4. துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி - போக்கு வரத்து

5. கே.எஸ்.ஈசுவரப்பா - கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்

6. ஆர்.அசோக் - வருவாய், அறநிலையத்துறை நீங்கலாக

7. ஜெகதீஷ் ஷெட்டர் - பெரிய, சிறிய தொழில்கள், சர்க்கரை நீங்கலாக

8. பி.ஸ்ரீராமுலு - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

9. எஸ்.சுரேஷ்குமார் - தொடக்க, உயர்நிலை பள்ளி கல்வி, சகாலா திட்டம்

10. வி.சோமண்ணா - வீட்டு வசதி

கோடா சீனிவாசபூஜாரி

11. சி.டி.ரவி - சுற்றுலா, கூடுதல் பொறுப்பாக கன்னட கலாசாரம்

12. பசவராஜ் பொம்மை - போலீஸ், உளவுத்துறை நீங்கலாக

13. கோடா சீனிவாச பூஜாரி - அறநிலையத்துறை, மீன் வளம், துறைமுகம்

14. ஜே.சி.மாதுசாமி - சட்டம், சட்டசபை விவகாரம், கூடுதல் பொறுப்பாக சிறிய நீர்ப்பாசனம்

15. சி.சி.பட்டீல் - கனிமம், நில அறிவியல்

16. எச்.நாகேஸ் - கலால்

17. பிரபுசவான் - கால்நடை

18. சசிகலா ஜோலே - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள்.

Next Story