திண்டிவனத்தில் பரபரப்பு, வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேர் கைது - மேலும் 2 பேர் தப்பி ஓட்டம்
திண்டிவனத்தில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டிவனம்,
திண்டிவனம் நேரு வீதியில் நேற்று இரவு புதுச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு காரில் 4 பேர் சுற்றி வந்தனர். அப்போது அந்த கார் வேறொரு வாகனத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாகனத்தில் வந்தவர், காரில் வந்தவர்களை தட்டிக்கேட்டார். இதனால் அவர்கள் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டினார்கள். இது பற்றி திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நேரு வீதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் 4 பேரும் காரை விட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.
அவர்களை போலீசார் நேரு வீதி முழுவதும் சல்லடை போட்டு தேடினார் கள். ஆனாலும் அவர்கள் 4 பேரும் சிக்கவில்லை. இதுகுறித்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர், அனைத்து போலீசாரையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட உத்தரவிட்டார். அதன் பேரில் திண்டிவனம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சஞ்சீவராயன்பேட்டை முதலாவது தெருவில் பதுங்கியிருந்த 2 பேரை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். இருவரையும் கைது செய்து திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் இருவரும் மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு கிராமணி தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணி (வயது 19) மற்றும் மரக்காணம் தாலுகா ரங்கநாதபுரம் ஒய்.எம்.சி.ஏ. தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
தப்பியோடிய இருவரில் ஒருவர் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் மற்றொருவர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடுபகுதியைச்சேர்ந்த மோகன்(23) என்பதும் தெரியவந்தது. அஜய் மீது கோட்டகுப்பம் மற்றும் ஆரோவில் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.
இவரது கூட்டாளியான மோகன் கடந்த 14-ந்தேதி திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டைச்சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்றதாக ஆரோவில் போலீசில் சிறுமியின் தந்தை புகார் செய்து உள்ளார். அவரது வீட்டில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட காரில் தான் மோகன் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சுற்றி வந்துள்ளார். அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் திண்டிவனத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story