கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Aug 2019 4:45 AM IST (Updated: 27 Aug 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. பழனிசாமி, அவரது குடும்பத்தினர், நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையும் தனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பி.ஆர்.பி. பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி உள்பட சிலர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் ஆய்வு நடத்தி, அனுமதி பெறாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை அடிப்படையில் எங்கள் மீது அமலாக்கத்துறை கடந்த 2013-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதில், சட்டவிரோதமாக குவாரி நடத்தி அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 830 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிரானைட் நிறுவனங்களின் சொத்துகளையும், வங்கியில் டெபாசிட் செய்த தொகையையும் அமலாக்கத்துறை முடக்கியது.

இதற்கு எதிராக தீர்ப்பாயத்தில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. முறைப்படி உரிமம் பெற்று தான் கிரானைட் தொழில் செய்தோம். எந்த விதிமீற லிலும் ஈடுபடவில்லை. எனவே மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ள எங்கள் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள கிரானைட் வழக்குகளுடன் இந்த வழக்கையும் மாற்றுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story