சிறு குடும்ப நெறி மூலம் அனைவரும் வறுமையில் இருந்து மீள முடியும்: மாணவர்களுக்கு அதிகாரி அறிவுரை


சிறு குடும்ப நெறி மூலம் அனைவரும் வறுமையில் இருந்து மீள முடியும்: மாணவர்களுக்கு அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 27 Aug 2019 3:45 AM IST (Updated: 27 Aug 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

சிறு குடும்ப நெறி மூலம் அனைவரும் வறுமையில் இருந்து மீள முடியும் என்று மாணவர்களுக்கு குடும்ப நல செயலகம் விருதுநகர் மாவட்ட துணை இயக்குனர் அறிவுரை வழங்கி பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி காளஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் தலைமை வகித்தார். கல்விக் கமிட்டி செயலாளர் வண்ணமுத்து முன்னிலை வகித்தார்.

மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல செயலகம் விருதுநகர் மாவட்ட துணை இயக்குனர் பாபுஜி மாணவர்களின் பேரணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதாவது:- உலக மக்கள் தினம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும். அதன் அவசியம் என்ன, குடும்ப கட்டுப்பாடு இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் பத்து முதல் பதினைந்து குழந்தைகள் வரை முன்பு நம் முன்னோர்கள் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். அதனால், வறுமை ஏற்பட்டதால், போதிய உணவுகள் கிடைக்காததால், பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

இந்நிலையை அகற்ற அரசு ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டம் மூலம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, 90 சதவீத மக்கள் நாம் இருவர், நமக்கு இருவர் என மாறிவிட்ட போதும், படிப்பறிவு இல்லாமலும், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகவும் சில பெண்கள் கருத்தடை செய்யாமல் உள்ளனர். இன்றைய நவீன கருத்தடை மருத்துவ முறைகளில் ஆண்களும் செய்து கொள்ளக்கூடிய மிக பாதுகாப்பான மருத்துவ முறைகள் உள்ளன.

சிறு குடும்ப நெறி மூலம் அனைவரும் வறுமையில் இருந்து மீள முடியும். சத்தான உணவு கிடைக்கும்போது, நோயற்ற வாழ்வு கிடைக்கும், அனைவரும் கல்வியில் மேற்படிப்பிற்கு செல்ல முடியும். அதனால், வரும் இளைய சமுதாயம் குடும்ப கட்டுப்பாடு விதிமுறையை பயன்படுத்தி, பிறரையும் பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், உலக மக்கள் தொகை தினத்தன்று பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர் மாரிக்கனி ஒருங்கிணைத்தார். மருத்துவ அலுவலர் விஜயன், ஆர்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார புள்ளியலாளர் மு.ரேணுகா தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story