காரியாபட்டி அருகே தாமரைக்குளத்தில் ஜவுளி தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்


காரியாபட்டி அருகே தாமரைக்குளத்தில் ஜவுளி தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே தாமரைக்குளத்தில் ஜவுளி தொழில் பூங்கா அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே தாமரைக்குளம் பொட்டல் குளம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஜவுளி தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காரியாபட்டி அருகே தாமரைக்குளம், பொட்டல் குளம் கிராமத்தில் ஜவுளி தொழில் பூங்கா அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது.அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்து கேட்பு கூட்டம் முழுமையாக நிறைவடையாமல் பாதியிலேயே முடிந்து விட்டது.

இந்நிலையில் ஜவுளி தொழில் பூங்கா அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் ஜவுளி தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிந்தவுடன் தாமரைக்குளம் இசலி மடை, இசலி மடை காலனி ,காரைக்குளம், செட்டிகுளம்,மேல காஞ்சிரங்குளம் உள்பட பல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாமரைக்குளத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. செல்லப்பா, அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சமாதானப்படுத்தி கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினர்.

மேலும் இசலி மடை, இசலி மடை காலனி உள்பட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரியாபட்டியில் நடைபெற்ற ஜவுளி தொழில் பூங்காவிற்கு வருகைதந்த கலெக்டரிடம் ஜவுளி தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்தனர். அப்போது அவர்களை, போலீசார் தடுத்தி நிறுத்தி காரியாபட்டி தாலுகா அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்வார் என்று தெரிவித்ததன் அடிப்படையில் அந்த கிராம மக்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு நின்றுகொண்டிருந்தனர்.

ஆனால் மனு வாங்காமல் கலெக்டர் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அருப்புக்கோட்டை சென்று மனு கொடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு பொதுமக்கள் கலெக்டர் எங்களிடம் மனு வாங்காததால் நாங்கள் எங்கும் மனு கொடுக்கச் செல்லவில்லை ஊருக்கு செல்கிறோம் என்று கூறி கிராமங்களுக்கு சென்று விட்டனர்.

Next Story