“சுவர் ஏறி குதித்து கைது செய்ய ப.சிதம்பரம் பயங்கரவாதியா?” ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி
“சுவர் ஏறி குதித்து கைது செய்ய ப.சிதம்பரம் என்ன பயங்கரவாதியா?” என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
சென்னை,
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமை தாங்கினார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசீனா சையத் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
ஆர்ப்பாட்டத்தின்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-
பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா வகையிலும் நாடு கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மறைக்கவும், மக்களின் மனநிலையை திசைதிருப்பவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. மூலம் மத்திய பா.ஜ.க. அரசு கைது செய்திருக்கிறது. கைது நடவடிக்கைக்கு பயந்த கட்சி காங்கிரஸ் அல்ல.
விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தர தயாராக இருந்தநிலையிலும் இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து அவரை அதிகாரிகள் கைது செய்யவேண்டிய அவசியம் என்ன? அவ்வளவு பெரிய பயங்கரவாதியா அவர்? தொடர்ந்து காங்கிரசை பலவீனப்படுத்தும் வகையில் அக்கட்சி தலைவர்களை மோடி அரசு குறிவைத்து வருகிறது. இதுதொடர்ந்தால் மோடி வெளிநாடுகளில் இனி சுற்றமுடியாது, வெளிநாட்டிலேயே போய் குடியேற வேண்டிய நிலை வரும்.
தர்மம் வெல்லும்
ப.சிதம்பரத்தை சட்டரீதியாக சந்திக்க பயந்துகொண்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் தர்மம் நிச்சயம் வெல்லும். எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் பா.ஜ.க. அரசின் நிலைமை மோசமாக போய்விடும். இனியாவது சட்டத்துக்கு பயந்து, மரியாதை தந்து பா.ஜ.க. அரசு நடக்கவேண்டும். பா.ஜ.க. அரசின் சர்வாதிகார போக்கு விரைவில் முடிவுக்கு வரும். செய்கின்ற பாவங்களுக்கு பா.ஜ.க. நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story