நெல்லை அருகே தீயணைப்பு வீரர்களுக்கு தற்காலிக பயிற்சி மையம்: டி.ஜி.பி. காந்திராஜன் ஆய்வு


நெல்லை அருகே தீயணைப்பு வீரர்களுக்கு தற்காலிக பயிற்சி மையம்: டி.ஜி.பி. காந்திராஜன் ஆய்வு
x
தினத்தந்தி 27 Aug 2019 4:00 AM IST (Updated: 27 Aug 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தற்காலிக பயிற்சி மையத்தை தீயணைப்பு துறை டி.ஜி.பி. காந்திராஜன் ஆய்வு செய்தார்.

நெல்லை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 237 தீயணைப்பு வீரர்களில் 100 பேருக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மாநில பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நெல்லை அருகே உள்ள மருதகுளம் நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் தற்காலிக பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி மையத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி. காந்திராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வரும் 30 பயிற்சியாளர்கள் மற்றும் சமீபகாலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் திறம்பட பணியாற்றிய 30 வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ், விருதுகள் வழங்கினார். அந்த பகுதியில் புதிய இடத்தை தேர்வு செய்து தீயணைப்பு வீரர்கள் நிரந்தர பயிற்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பின்னர் டி.ஜி.பி. காந்திராஜன் கூறியதாவது:-

நடப்பு ஆண்டில் 38 ஆயிரத்து 140 தீவிபத்து மற்றும் மீட்பு அழைப்புகளில் பணியாற்றி, 2 ஆயிரத்து 78 மனித உயிர்களையும், 772 விலங்குகளையும், ரூ.24 கோடி மதிப்பிலான உடமைகளையும் தீயணைப்பு துறையினர் காப்பாற்றி உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதேபோல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளை வான்வழியாக கண்காணிக்க 50 ‘ட்ரோன்கள்’ எனப்படும் பறக்கும் கேமராக்கள் ரூ.1 கோடியில் வாங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இணை இயக்குனர் விஜயசேகர், மதுரை துணை இயக்குனர் சரவணகுமார், நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story