வள்ளியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல்: சங்கரன்கோவில்-அம்பையில் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து வள்ளியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில்-அம்பையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வள்ளியூர்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் அம்பேத்கர் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில், கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 43 பேரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், மக்கள் தேசம் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தேரடி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து சங்கரன்கோவில்- கழுகுமலை சாலை வழியாக ஊர்வலமாக சென்று கவுரி சங்கர் தியேட்டர் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மக்கள் தேசம் கட்சி மாவட்ட நிர்வாகி தம்பி சேவியர், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் மன்னார், மூனார் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பை ஒன்றிய செயலாளர் பீமாராவ் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், மணிமுத்தாறு நகர செயலாளர் பாஸ்கர், கடையம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் தாழ்த்தப்பட்டோர் சீர்திருத்த சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளர் ஜாண்சன், துணை தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் நெல்சன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அமைப்பாளர் சுந்தர், ஆதிதமிழர் பேரவை நிர்வாகி பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story