நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவி பலி - காப்பாற்ற முயன்ற வாலிபரும் சாவு


நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவி பலி - காப்பாற்ற முயன்ற வாலிபரும் சாவு
x
தினத்தந்தி 26 Aug 2019 10:00 PM GMT (Updated: 26 Aug 2019 8:30 PM GMT)

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற வாலிபரும் பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நெல்லை,

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் வீரபெருமாள். இவருடைய மகள் வனிதா (வயது 20). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். பாளையங்கோட்டை செந்தில்நகரை சேர்ந்த இசக்கி மகன் சங்கரநயினார் (21). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

நேற்று மாலை இருவரும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக வனிதாவின் மொபட்டில் சென்றனர். நெல்லை அருகன்குளம் அருகே பைபாஸ் ரோட்டில் உள்ள பாலத்தின் அருகில் தாமிரபரணி ஆற்றில் இறங்கி குளித்தனர்.

அப்போது வனிதா எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை சங்கரநயினார் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

இதை பார்த்து அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற வந்தனர். ஆனால் அதற்குள் வனிதா, சங்கரநயினார் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி வனிதா, சங்கரநயினார் ஆகியோரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் பற்றி தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து இருவரும் காதல் ஜோடியா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார். ஆற்றில் மூழ்கிய இளம்பெண்ணும், அவரை காப்பாற்ற சென்ற வாலிபரும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story