கோவில்பட்டி வில்லிசேரி நடுக்காலனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை


கோவில்பட்டி வில்லிசேரி நடுக்காலனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Aug 2019 3:00 AM IST (Updated: 27 Aug 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி வில்லிசேரி நடுக்காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, ஏரல் தாலுகா தென்திருப்பேரை தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊரில் 150-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் பயன்பாட்டுக்காக அரசு சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுடுகாடு மற்றும் இடுகாடு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனை சுமார் 25 ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் எங்களுக்கு தெரியாமல் சிலர் அத்துமீறி எங்கள் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டில் 3 உடல்களை புதைத்து உள்ளனர். எனவே அந்த உடல்களை புதைத்த மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

கோவில்பட்டி வில்லிசேரி நடுக்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்கள் ஊரில் புதிதாக தார் சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் சாலை அமைக்க உள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அரசு அதிகாரிகளும் ஆக்கிரமிப்பிற்கு சாதகமாக செயல்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலை அமைத்து தர வேண்டும்’ என்று கூறி இருந்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதே போல் முத்தையாபுரம் தோப்பு தெரு பஸ் நிறுத்தம் பகுதியில் நடக்கும் விபத்தை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி பக்கிள் ஓடையின் இருபுற சுவற்றிலும் சிமெண்டு உதிர்ந்து ஜல்லி கற்கள் தெரியும் படி உள்ளது. இதனால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மேலும் அந்த பக்கிள் ஓடையில் அதிகப்படியாக இருக்கும் ஆகாய தாமரை செடியையும், பிளாஸ்டிக்கையும் உடனடியாக அகற்ற வேண்டும்’ என்று கூறி இருந்தனர். வனவேங்கைகள் கட்சியினர் சிவக்குமார் தலைமையில் கொடுத்த மனுவில், நாங்கள் குறவன் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். எங்கள் சமுதாய மக்களை இழிவு படுத்தும் விதமாக கிராம கலை நிகழ்ச்சி என்ற பெயரில் குறவன் குறத்தி ஆட்டம் என்ற ஆபாச நடனம் கோவில் விழாக்களில் அரங்கேற்றம் செய்கிறார்கள். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச ஆட்டமோ, கலை நிகழ்ச்சியோ எதுவும் நடக்க கூடாது. எனவே கோவில் நிர்வாகத்திற்கும், அறநிலையத்துறைக்கும், மாவட்ட காவல்துறைக்கும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

காயல்பட்டினம் சேதுராஜா தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் எங்கள் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 3 தலைமுறைகளாக ஊர்கமிட்டி மூலம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் நடக்க உள்ளது.

இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் கோவில் கொடை விழா நடத்த விடாமல் செயல்பட்டு வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, நடக்க உள்ள கோவில் கொடை விழாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Next Story