தங்க புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி - போலி சாமியார் பிடிபட்டார்
தங்க புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர்,
மத்தூர் அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 54). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் தான் சாமியார் என்றும், பழனியம்மாளின் கையில் எலுமிச்சை பழத்தை கொடுத்து குறி சொன்னார். அப்போது அவரது வீட்டின் நிலத்தில் தங்க புதையல் உள்ளதாகவும், அதை எடுத்தால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய பழனியம்மாளிடம் அதை எடுக்க நிறைய பணம் செலவாகும் என்று கூறினார்.
இதையடுத்து பழனியம்மாள் அந்த சாமியாருக்கு முதலில் ரூ.10 ஆயிரமும், 2-வது முறையாக ரூ.50 ஆயிரமும், 3-வது தவணையாக ரூ.45 ஆயிரமும் வங்கி மூலம் செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் அதிகமாக பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த பழனியம்மாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் தங்க புதையல் எடுப்பதற்காக பூஜை செய்வதற்காக சாமியார் காரில், பழனியம்மாள் வீட்டிற்கு வந்து இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்து மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளியை சேர்ந்த சுரேஷ் (27) என்றும், போலி சாமியார் என்றும் தெரிய வந்தது. அவர் தங்க புதையல் இருப்பதாக கூறி பழனியம்மாளிடம் பணம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story