பரமத்தி வேலூரில், மணல் திருடிய 4 லாரிகளை சின்ராஜ் எம்.பி. சிறைபிடிப்பு
பரமத்தி வேலூர் பகுதியில் மணல் திருடி வந்த 4 லாரிகளை நாமக்கல் நாடாளுமன்ற உறுப் பினர் சின்ராஜ் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் - மோகனூர் சாலையில் குப்புச்சி பாளையம் அருகே உள்ள பில்லாபாறை பகுதியில் லாரிகளில் மணல் திருடி வருவதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ்க்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு வந்த சின்ராஜ் எம்.பி. மணல் திருடி வந்த 4 லாரிகளை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தார். பின்னர் அவர் பரமத்திவேலூர் போலீசார் மற்றும் பரமத்தி வேலூர் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்பேரில் அங்கு வந்த பரமத்தி வேலூர் தாசில்தார் செல்வராஜ் மற்றும் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோரிடம் லாரிகளை எம்.பி. ஒப்படைத்தார். தப்பியோடிய மணல் லாரி டிரைவர்கள் மற்றும் மணல் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் மற்றும் தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற புதிய அரசு சட்டக்கல்லூரி தொடக்கவிழாவில் சின்ராஜ் எம்.பி. (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பேசும்போது, மாவட்டத்தில் சில இடங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் எங்கும் மணல் கொள்ளை உள்ளிட்ட எந்த ஒரு சட்டவிரோத செயல்களும் நடைபெறவில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story