ஸ்ரீதேவி வாழ்க்கை கதையா? பிரியா வாரியர் படத்தை எதிர்த்து வழக்கு


ஸ்ரீதேவி வாழ்க்கை கதையா? பிரியா வாரியர் படத்தை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 27 Aug 2019 3:10 AM IST (Updated: 27 Aug 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கண்சிமிட்டல் பிரபலமான பிரியா வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் பிரியா வாரியர் தன்னை ஸ்ரீதேவி என்று அறிமுகப்படுத்துகிறார். சிகரெட் பிடிக்கிறார். மது அருந்துகிறார். குளியல் தொட்டியில் ஒரு பெண் பிணமாக கிடப்பதுபோல் டிரெய்லர் முடிகிறது.

நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையையும் துபாய் ஓட்டலில் குளியல் தொட்டியில் அவர் மரணம் அடைந்த சம்பவத்தையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினருக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் நோட்டீசு அனுப்பி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனை ஏற்க படக்குழுவினர் மறுத்து விட்டனர்.

படத்தின் இயக்குனர் பிரசாந்த் மாம்புலி கூறும்போது, “ஒரு நடிகை லண்டனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் அவருக்கு என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது கதை. படத்தை பார்த்த பிறகு ஸ்ரீதேவி கதையா இல்லையா என்பதை முடிவு செய்யட்டும். தலைப்பை மாற்ற மாட்டேன்” என்றார்.

படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில் படத்தை தடை செய்யும்படி கோர்ட்டில் வழக்கு தொடர போனிகபூர் முடிவு செய்து இருக்கிறார். இதுகுறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடர்வார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

Next Story