தாராவியில் சரக்கு வேன் மோதி முதியவர் பலி நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்


தாராவியில் சரக்கு வேன் மோதி முதியவர் பலி நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:45 AM IST (Updated: 27 Aug 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முதியவர் சரக்கு வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை,

மும்பை தாராவி, 60 அடி சாலையில் உள்ள நவஜூவன் குடியிருப்பில் 5-வது மாடியில் வசித்து வந்தவர் தங்கவேல்(வயது75). இவர் கிங்சர்க்கிள் பகுதியை சேர்ந்த ‘செபி’ அதிகாரி முரளிதர் ராவிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 8 மணியளவில் தங்கவேல் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.

இவர் தாராவி- சயான் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள அம்பேத்கர் சவுக் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. மேலும் அவரது சட்டை வேனில் சிக்கியது. இதனால் அவர் வேனுடன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் வேன் டிரைவரை நோக்கி சத்தம்போட்டனர். எனினும் டிரைவர் நிறுத்துவதற்குள் வேன் டயர் தங்கவேல் மீது ஏறியது. இதில், உடல் நசுங்கிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள சயான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர்.

அங்கு முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சாகுநகர் போலீசார் சரக்கு வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான தங்கவேல் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர், இளவடி தெருவை சேர்ந்தவர் ஆவார்.

இவருக்கு முத்துகுமரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தமிழர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் தாராவி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story