கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் அஜித் பவார் மீது வழக்குப்பதிவு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை


கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் அஜித் பவார் மீது வழக்குப்பதிவு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Aug 2019 5:15 AM IST (Updated: 27 Aug 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மாநில கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் அஜித் பவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில கூட்டுறவு வங்கிக்கு 2007-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேட்டில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார், விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் 34 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது.

இருப்பினும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதை எதிர்த்து சமூக ஆர்வலரான சுரிந்தர் ஆரோரா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்ததுடன், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் எஸ்.கே.ஷிண்டே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதை சுட்டிக்கட்டிய நீதிபதிகள், அவர்கள் மீது அடுத்த 5 நாட்களுக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த 22-ந் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில் எம்.ஆர்.ஏ. மார்க் போலீஸ் நிலைய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அஜித் பவார் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஊழல் வழக்கில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story