அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 34 பேர் கைது
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதை கண்டித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே வந்ததும் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் கைகோர்த்து கொண்டதால் கைது செய்வதற்கு போலீசார் திணறினர்.
இதையடுத்து அவர்கள் ஒவ்வொருவரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். சாலை மறியலில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலைமறியலினால் அங்கு சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து சேலம் அஸ்தம்பட்டி ரோட்டில் உள்ள கோர்ட்டு முன்பு வக்கீல்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில இளைஞர் அணி செயலாளர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், சமூக நீதி, புரட்சிகர இந்து முன்னணி, தமிழ்நாடு இளைஞர் இயக்கம், தமிழ் கலாசார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை தேசிய வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். விரைவில் கைது செய்யப்படவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும், என்று கூறினர்.
Related Tags :
Next Story