அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையை மீறி, மலைரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்
அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையை மீறி மலைரெயில் தண்டவாளத்தில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கின்றனர்.
குன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு என்ஜின் மாற்றும் பணி குன்னூரில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெறுகிறது. மேலும் என்ஜின்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் பணிமனையும் அங்கு செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களால் மலைரெயில் சேவையில் குன்னூர் ரெயில் நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு தினமும் பகல் நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டமும், உள்ளூர்வாசிகளின் கூட்டமும் காணப்படும்.
இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் மலைரெயில் தண்டவாளத்தை கடந்து செல்வது, அதில் நின்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் எச்சரித்து இருக்கிறது. அதாவது தண்டவாளத்தை கடந்து சென்றால் ரூ.1000, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனாலும் ரெயில்வே நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்வது, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சுற்றுலா பயணிகள் சிலர் குன்னூர் ரெயில் நிலைய தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கு காரணம் ரெயில்வே நிர்வாகத்தின் எச்சரிக்கை குறித்து சுற்றுலா பயணிகள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மலைரெயிலில் பயணம் செய்ய வரும் சுற்றுலா பயணிகள் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது, தண்டவாளத்தை கடந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கை. இதனால் விபத்துகளில் சிக்கி கொள்வார்கள் என்பதை அவர்கள் அறிவது இல்லை. தற்போது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் எச்சரித்து உள்ளது. ஆனால் அந்த எச்சரிக்கை முழுமையாக சுற்றுலா பயணிகளை சென்றடையவில்லை. பலர் அறியாமல் அந்த தவறை செய்கின்றனர். சிலர் எச்சரிக்கையை மீறி செயல்படுகின்றனர். எனவே ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story