அம்பேத்கர் சிலை உடைப்பு, கோவையில், 2 பஸ் கண்ணாடிகள் உடைப்பு-வாலிபர் கைது - தலைவர்கள் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு


அம்பேத்கர் சிலை உடைப்பு, கோவையில், 2 பஸ் கண்ணாடிகள் உடைப்பு-வாலிபர் கைது - தலைவர்கள் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து கோவையில் 2 அரசு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கோவையில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இடிகரை,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கோவையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி கோவை உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கோவையில் நேற்றுக்காலை 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கோவை சாய்பாபா காலனியில் உள்ள மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் ஊட்டிக்கு செல்லும் அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பஸ் மீது கல்வீசினார். இதில் பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்தது.

இதைப்பார்த்த அந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பஸ் மீது கல் வீசிய நபர் அதில் ஒரு காகிதத்தை சுற்றி வீசி உள்ளார். அதில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்தும் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும். சிலைகளை உடைக்கலாம். ஆனால் சித்தாந்தங்களை சிதைக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல் நேற்றுக்காலை 6.30 மணியளவில் கவுண்டம்பாளையம் அருகே மூவர் நகரில் மருதமலை செல்லும் அரசு பஸ் மீதும் ஒருவர் கல் வீசி விட்டு தப்பி ஓடினார். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதைதொடர்ந்து அந்த பஸ் துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

இந்த 2 சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் சாய்பாபா காலனி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பஸ் மீது கல்வீசியவரின் அடையாளம் தெரிந்தது. அவர் கே.கே.புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்த சுரேஷ் என்கிற ராவணன் (வயது 29) என்று தெரியவந்தது. விசாரணையில் சுரேஷ் தான் சாய்பாபா காலனி பஸ் நிலையம் மற்றும் கவுண்டம்பாளையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ்கள் மீது கல் வீசியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் தமிழ் புலிகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதின் காரணமாக கோவையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடகோவை எப்.சி.ஐ. குடோன் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை, காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை மற்றும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, அண்ணா சிலை உள்பட கோவை மாநகரம் முழுவதும் உள்ள 40 சிலைகளுக்கு நேற்றுக்காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலைக்கும் 2 போலீசார் வீதம் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story