தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை, எதிர்கால தலைமுறையினரிடம் எடுத்துரைக்க வேண்டும் - கலெக்டர் பேச்சு
தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை எதிர்கால தலைமுறையினரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று வி.ஐ.டி.யில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் நீர் மேலாண்மை மற்றும் மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான கருத்தரங்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. வி.ஐ.டி. துணைத்தலைவர் சேகர் விசுவநாதன், பதிவாளர் சத்திய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார்.
கருத்தரங்கிற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க மத்திய அரசால் ‘ஜல்சக்தி அபியான்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மனிதனின் தேவைக்காக இயற்கைகள் அழிக்கப்பட்டு மழை பொழிவு குறைந்து விட்டது. எனவே தற்போதுள்ள இயற்கையை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் நமது பிள்ளைகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.
தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை எதிர்கால தலைமுறையினரிடம் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் மூலம் அனைவரிடமும் தண்ணீர் சேமிப்பின் அவசியம் பற்றிய கருத்துகள் சென்றடையும். இன்றைய கால கட்டத்தில் பருவ மழையின்போது சில தினங்களிலேயே நமக்கு தேவையான தண்ணீர் கிடைத்து விடுகிறது. ஆனால் அதனை சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. சில சமயம் பருவமழை பொய்த்து விடுகிறது.
இதற்கு காரணம் நமது வளர்ச்சியை மட்டும் எதிர்நோக்கி இயற்கையை அழித்தது தான். மேலும் நீர் சேமிப்பு இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் மரங்கள் அழிப்பு ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் போனது ஆகியவையாகும். அரசு தற்போது ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமிக்கவும் அனைத்து குடியிருப்புகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன் அவசியம் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது தண்ணீர் கேன்களில் மட்டுமே சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தநிலை தொடர்வதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிக அளவில் மரங்களை வளர்த்து பறவைகள் வாழ வழி செய்திட வேண்டும்.
இந்த திட்டம் குறித்து பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தெரிவித்து ஒவ்வொரு பள்ளிகளிலும் காலியாக உள்ள பொது இடங்களிலும் மரக்கன்றுகள் நடவும், மழைநீர் சேகரிப்பு தொட்டியை அனைத்து கட்டிடங்களிலும் அமைத்து மழைநீர் மற்றும் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி எதிர்கால பிள்ளைகளுக்கு நீரின் தேவையையும் இயற்கையை பாதுகாத்தால் அடுத்த தலைமுறை இந்த உலகில் சந்தோஷமாக வாழ முடியும் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story