மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கால்வாயில் பிணத்தை வைத்து தர்ணா போராட்டம் - தண்டராம்பட்டு அருகே பரபரப்பு
மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் கால்வாயில் பிணத்தை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு அருகே கீழ்வணக்கம்பாடி மாதா கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கான சுடுகாடு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் இதற்கு பாதை இல்லாததால் அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. அப்போது விவசாய பயிர்கள் சேதமாவதாக கூறி நிலத்தின் உரிமையாளர்களுக்கும் பிணங் களை எடுத்து செல்பவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
இதனால் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கால்வாயில் இறங்கி பிணத்தை கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த கால்வாயின் குறுக்கே பாலம் அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.
கடந்த 24-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது கீழ்வணக்கம்பாடி- தண்டராம்பட்டு சாலையில் உள்ள பெரிய ஏரிக்கரை மதகு அருகே உள்ள கால்வாயில் பிணத்தை திடீரென வைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த சாத்தனூர் அணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து பிணத்தை எடுத்துக்கொண்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story